சென்னை

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

கொரோனா பரவல் மீண்டும் சென்னை நகரில் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கி வருகின்றனர்.  முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி பின்பற்றாதது போன்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.   பலர் ஒரே இடத்தில் கூடுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகப்படியானோர் கூடியுள்ளதாக திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமனுக்குத் தகவல் கிடைத்தது.

திருவிக நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மண்டபத்திற்குச் சென்று பார்த்தபோது, சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் இருப்பது தெரிந்தது. அதிகாரிகள் அவர்களை வெளியேற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மண்டபத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். அந்த நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்ட முடியாது என்று அவர்கள் வாக்குவாதம் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த மண்டபத்திற்குச் சீல் வைத்தனர்.