சென்னை,
ஜல்லிக்கட்டுக்கான போராட்ட முடிவில் மெரினாவில் நடைபெற்ற வன்முறை குறித்து உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக பிரச்சினை தொடங்கியது.
அதையடுத்து போலீசார் நடத்திய தாக்குதல்களில் இளைஞர்கள் பலர் தாக்கப்பட்டனர். பல மாணவர்களின் மண்டை போலீசாரின் லத்தியால் அடித்து உடைக்கப்பட்டது. மேலும் பலரின் காலையும் போலீசார் அடித்து உடைத்தனர்.
இந்நிலையில் மெரினா அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு யாரோ சமூக விரோதிகள் தீ வைத்தனர். மேலும் நடுக்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர்.பிள்ளை தெரு போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள், கார்கள் கொளுத்தப்பட்டன.
இதனால், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அசாதாரண நிலையே நீடித்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தனித்தீவாக காட்சி அளித்து வருகிறது.
இதுபற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மையறியும் குழுவினர் மெரினா பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதுகுறித்த இடைக்கால அறிக்கையை இன்று வெளியிடுகிறார்கள்.