மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?

Must read

இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள்.
நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர்.
“மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்’ என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்றே கூறுகிறார்.
நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.
மார்கழி என்றாலே ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் நம் மனக்கண்ணில் தோன்றுவாள். எல்லா வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்கிணையாக ஆண்டாளும் போற்றப்படுகிறாள். என்ன காரணம்?
ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகியோரின் அவதார நட்சத்திரமும் பூரமே). இவளை பூமாதேவி அம்சம் என்பர். இவள் சிறுவயதிலிருந்தே அரங்கன்மீது பக்திகொண்டு, அவரை மணாளனாக அடைய விரும்பினாள்.
பிருந்தாவனத்தில் கோபியரான கன்னிப்பெண்கள், அதிகாலையிலேயே யமுனையில் நீராடி,
“காத்யாயனி மஹாமாயே
மஹாயோகின்ய தீஸ்வரி
நந்தகோப சுதம்
தேவி பதிம் மே குருதே நம:’
என்று தேவியைத் துதித்து, கண்ணனையே கணவனாக அடையவேண்டினர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. (மேற்கண்ட துதியைச் சொல்லி தேவியை வழிபட்டு நல்ல கணவனை அடைந்தோர் பலர்).
அதுபோல, வில்லிபுத்தூரையே பிருந்தாவனமாக பாவித்த கோதை தன்னை கோபிகையாக எண்ணிக்கொண்டு, அரங்கனை மணாளனாக அடைய மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை என்னும் முப்பது பாடல்களைப் பாடினாள்.
“எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ’ என்று மற்ற தோழியரையும் எழுப்பி, “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினே நேரிழையீர்’ என்று அவர்களையும் அழைத்து வழிபடக் கூறினாள்.
மார்கழி நோன்பு முடிந்தது. மறுநாள் அதிகாலையில், “மதுசூதனன் வந்து தன் கைத்தலம் பற்றி’ மணம் புரிந்துகொண்டதாக கனவு காண்கிறாள். இந்தக் கனவு பற்றி அவள் பாடிய 11 பாடல்களில் திருமணச் சடங்குகள் எல்லாவற்றையும் பாடியிருக்கிறாள்.
“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்”
என்ற ஆண்டாள் மொழியை அறியாதவர் யார்.
அவள் நோன்பு பலித்தது. பெரியாழ்வார் கனவில் தோன்றிய அரங்கன், “கோதையை மணப்பெண்ணாக ஸ்ரீரங்கம் அழைத்து வா’ என்கிறான். திருவரங்கத்து பட்டாச் சாரியர்களுக்கும் இந்தத் தகவலைச் சொன்னான்.
அதன்படியே பெரியாழ்வார் மணக் கோலத்தில் கோதையை அழைத்துவர, கர்ப்பக்கிரகத்திலிருந்து “உள்ளே வருக’ என்ற ஒலி கேட்கிறது. தளிர்நடையுடன் கோதை உள்ளே செல்ல, அவளது பௌதீக உடல் அரங்கனுக்குள் ஐக்கியமாகிறது. ஆண்டவனையே தன் பக்தியினால் மணந்து ஐக்கியமானதால் அவள் ஆண்டாளாகிறாள். எனவேதான் இந்த மார்கழி நோன்பு- கோதை நோன்பு உன்னதம் பெறுகிறது.
சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரும் தில்லை நடராஜருள் மறைந்தார். அதனால் தான் தில்லை நடராஜரை தரிசிக்க முக்தி என்பர்.
(திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் வசித்த வீட்டை கோவிலாகக் காணலாம். ஆண்டாளுடன் அரங்கன் சேவை சாதிக்கிறார்.
பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனை மூலவருக்கு எதிரில் காணலாம். ஆனால் வில்லிபுத்தூரில் பெருமாள் அருகிலேயே காணலாம். ஏன்? பெரியாழ்வார் கருடனின் அம்சம். அரங்கனுக்கு மாமனார். எனவே ஆண்டாள் ஒருபுறம்; மாமனார் மறுபுறம். வேறெங்கும் காணமுடியாத சேவை!
 
 
Importance of Margazhi month.
 
source : https://www.facebook.com/418106794886776/photos/a.419114258119363.99277.418106794886776/1352502564780523/?type=3

More articles

Latest article