சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல  புதிய விதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் இதுவரை  திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. மேலும்,  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என குற்றச்சாட்டுக்களும் உள்ளன. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, பல்வேறு மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்களுக்குப் பின்னரே எழுத்துத் தேர்வு நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழித்தாள் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக 45 நிர்ணயிக்கப்பட உள்ளது.

அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கான 10% இடஒதுக்கீடு வழங்கவும்  அனுமதி வழங்கி உள்ளது.

பெண்களுக்கான நியமனங்களில் 40 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் உத்தரவு பெறப்பட வேண்டும்.

அரசுத்துறைகளில் காலியாக குருப் 1, 2,4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதிகள் பெறப்பட்டவுடன், அக்டோபர் மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன், அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதியும் வெளியிடப்படும்.

தேர்வாணையத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர், 75 நாட்கள் கழித்துதான் எழுத்துத் தேர்வு நடத்துப்படும் எனவும் அதற்கான ஒப்புதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.