சென்னை: நடிகை திரிஷா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய  சென்னை காவல்துறைக்கு, நாளை ஆஜராவதாக  மன்சூர் அலிகான் கடிதம் எழுதி உள்ளார். மேலும், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல வில்லன் நடிகர்  மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின்மூலம் பெரும் புகழடைந்த மன்சூர் அலிகான், சர்ச்சைக்குறிய வகையிலும் புகழ் பெற்றவர். இவர் அவ்வப்போது தமிழ் சினிமா பட விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் எதைப் பேச வேண்டும் என  தெரியாமல், காமெடி செய்வதாக ஏதாவது கூறி பிரச்சினைகளில் மாட்டிகொள்வார்.  அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சமீபத்தில்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா முதல் கண்டன பதிவை வெளியிட, அதனை தொடர்ந்து, திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மன்சூர் அலிகான் முதலில் ஒரு விளக்கம் கொடுத்தாலும், அது யாருக்கும் ஏற்புடையதாக இல்லை. தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடித்த நிலையில், நடிகர் சங்கம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும்,  ”நீட் தற்கொலை, மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தேசிய மகளிர் ஆணையம் பெரிதாக செயல்படாமல் இதற்கு மட்டும் வந்து குரல் கொடுக்கிறார்கள். நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்காமல் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்க கூடாது. முறைப்படி நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது. மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு அவர் இல்லாத நிலையில் மனைவியிடம் சம்மனை வழங்கினர். அதன்பிறகு காவல் நிலையத்தில் ஆஜராகுவாரா என்ற கேள்வியும் எழுந்தநிலையில்,  மன்சூர் அலிகான் தரப்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இன்று காவல்நிலையத்தில் ஆஜராகாத மன்சூர் அலிகான், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், நாளை போலீசில் ஆஜராக அனுமதி கோரி கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கடிதத்தில்,  “எனது குரல்வளை 15 நாட்கள் தொடர் இருமலால் நேற்று மிகவும் பாதிக்கப்பட்டு பேச மிகவும் சிரமமாக இருப்பதால், நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தங்களை சந்திக்க தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.