நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்து, தயாராகியிருக்கும் புதிய படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ பட புகழ் மஞ்சு வாரியர் கதை நாயகியாக நடிக்கிறார். மேலும் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூவர் இசையமைத்து உள்ளனர். தவிர, பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

‘அசுரன்’ படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியாரின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், படத்தின் தலைப்பு ‘சென்டிமீட்டர்’ என வித்தியாசமாக இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் தோற்றம் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதாலும், ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.