டில்லி

ணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக  ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். குக்கி என்ற பழங்குடி பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினர் கடந்த 3ம்தேதி நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

பல்வேறு மாவட்டங்களுக்கும் கலவரம் பரவி,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  வன்முறையாளர்கள் வாகனங்கள், வீடுகள், பள்ளிக் கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தினர். இதுவரை கலவரத்தில்  75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறையில் காவல்துறையினர்  உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு நேற்று மாலை சென்றார். அவர் 3 நாள் பயணமாகச் சென்று அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

நேற்று மாலை அமைச்சர் அமித் ஷா மற்றும் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் இடையே நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  மத்திய மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகையைச் சமமாக ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.