மணிப்பூர் 

மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம், நீடித்துவருகிறது.  போராட்டத்தின் போது குக்கி இனப் பெண்கள் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உலகமே அதிர்ந்தது.

இது போன்ற சம்பவங்களால் மணிப்பூரில் ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், அங்கு அவ்வப்போது வெடிக்கும் வன்முறையால் கடந்த சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர், மலைப்பகுதியில் இருந்து அதன் கீழ் உள்ள பகுதிக்குள் வசிப்பவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். தாழ்வான பகுதியில் உள்ள கிராம தன்னார்வலர்களும் இதற்குப் பதிலடி கொடுத்தனர்.

இதில் கிராம தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மனோரஞ்சன் குக்கி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு படையினர் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.