மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேவேளையில் பழங்குடியினப் பெண்கள் மீது மெய்தீய் இன தீவிரவாதிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பு குறித்த வீடியோ மற்றும் செய்திகள் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வும் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருமான வுங்ஜாகின் வால்டே மீது மே 4 ம் தேதி மெய்தீய் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது மண்டை உடைந்ததை அடுத்து பக்கவாத நோயால் கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தாளொன் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பழங்குடியின விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் பைரன் சிங்-கிற்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இன கலவரம் துவங்கிய அன்று பைரன் சிங்குடன் ஆலோசனை நடத்திவிட்டு வீடு திரும்பிய வுங்ஜாகின் வால்டே-வை சூழுந்து கொண்டு தாக்கிய வன்முறை கும்பல் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சியதோடு அவரது ஓட்டுனரை கொலை செய்தது.

மின்சாரம் பாய்ந்ததில் உடல் செயலிழந்த வால்டே தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மண்டையில் அடிபட்டதில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் செயலிழந்ததை அடுத்து அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த அவரை பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் யாரும் வந்து சந்திக்கவில்லை என்று அவரது மகன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை தெரியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.