இம்பால்: மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில்,காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.  மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில்,  இரு இன மக்களிடையே கடந்த 2 மாதங்களை கடந்தும் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ வைரலானது. இந்த கொடுஞ்செயலை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர்.  இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு மாதமாக வன்முறையை அடக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளனர். அங்குள்ள மக்களிடையே நடைபெற்று வரும் வன்முறைக்கு காரணம்  ஓப்பியம் பாப்பி போதை செடிகள் பயிரிடுவதை தீவிரமாக ஒழித்து வருவதே கலவரத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமலாக ஏராளமானோர் தங்களது வீடு ,உடமைகளை இழந்துள்ளனர். . சொந்தங்கள் காண வில்லை… சொந்த ஊர் எங்குள்ளது என்றே தெரியவில்லை… வன்முறை தொடங்கிய முதல் நாளில் மெய்தி மக்களுக்கு பயந்து குக்கி இன மக்கள் ராணுவ முகாமில் குவிந்தனர். 100 பேர் தங்கும் அறையில் 500 பேர் தங்கி உள்ளனர்.

தற்போது மணிப்பூரில் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு நடைபெற்று வரும் வன்முறைகள் முழுமையாக தெரியவில்லை. இந்த சூழலில்தான் இளம்பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானது. இந்த  சம்பவம்  நடைபெற்று முடிந்தது இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நோங்க்பாக் செக்மாய் எனும் இடத்தில் உள்ள அவரது வீடு சொந்த கிராம மக்களாலே அடித்து நொறுக்கப் பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெய்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் அவரது வீட்டை கோபத்துடன் அடித்து சேதாரம் ஆக்கியுள்ளனர்.

இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளும், உச்சநீதிமன்றமும் சாட்டையை சுழற்றிய நிலையில், குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது. ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்றும் 32 வயது நபர் முதலில் கைது செய்யப்பட்டு அவரது புகைப்படம் வெளியான நிலையில் இரண்டாவது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் “மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று மணிப்பூர் காவல்துறை டிவீட் செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று,  மாநில முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி கனமழையில் மணிப்பூர் மக்கள் பேரணி நடத்தினர்.  இதற்கிடையில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை எதிர்த்தரப்பு பெண்கள் தீ வைத்து கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், அங்கு முடக்கப்பட்டுள்ள  இணையதள சேவை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால்,  மேலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகும் என்றும், போதைப் பொருள், வெறுப்பு அரசியல்வாதம், கட்டுப்பாடற்ற சட்ட ஒழுங்கு, மனித உரிமை அத்துமீறல்கள், அண்டை நாடுகளிடம் கொண்டுள்ள தீவிரவாத தொடர்புகள், மத வெறுப்புணர்வு இதற்கெல்லாம் மேலாக பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல் போன்றவை  இணைய சேவை தொடங்கினால் வெளிவரும் என  சமூக ஆர்வலர்களும், அங்கு நேரில் ஆய்வு செய்த பத்திரிகையாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.