இம்பால்

மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்தி இனத்தவரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.  இவர்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்த்து குகி பழங்குடியினர் தீவிர போராட்டம் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இவ்விரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது  மெய்தி சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யும்படி முன்னர் பிறப்பித்த உத்தரவை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அரசின் இந்த உத்தரவானது 200-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய இன அமைதி இன்மைக்குத் தூண்டுதலாக இருந்ததாக நம்பப்படுவதால் இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முந்தைய உத்தரவில் உள்ள சர்ச்சைக்குரிய பத்தியை நீக்குவதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இந்த உத்தரவு உள்ளதாகவும் பழங்குடியினர் பட்டியல் திருத்தங்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை சுட்டிக்காட்டி, முந்தைய உத்தரவை நீக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.