மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தனித்துப் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியிருப்பது இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் கட்சியின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுக்க மேற்கு வங்கம் தவிர, அசாம் மற்றும் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் மனநிலையில் உள்ளது.

இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் முரன்பாடு நீடித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் ‘தனித்து செல்வோம்’ (‘ஏக்லா சலோ ரே’) என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யில் சமாஜ்வாடியுடன் கூட்டணி எட்டப்பட்ட நிலையில் டெல்லி, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இவ்விரு கட்சிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொள்ளும் என்றும் தற்போதுள்ள சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது மட்டுமே பாஜக-வை தோற்கடிக்க ஒரே வழி என்பதை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உணர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதிர் ரஞ்சன் பேசியது குறித்து மம்தா பானர்ஜீ அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் ஆதிர் ரஞ்சனின் பேச்சு அவசியமற்றது என்று ஆர்.ஜெ.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களில் மம்தா பானர்ஜி டெல்லி செல்வார் என்றும் அப்போது சோனியா காந்தியை சந்தித்து கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.