சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் வரும் 1ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் தமிழக முதல்வர், துணைமுதல்வர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு தனது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, மறைந்த முதல்வர் ‘ ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால், சிவாஜி மணி மண்டபத்தை நேரில் வந்து திறந்து வைத்து இருப்பார். ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவில் பங்கேற்காதது வருத்தத்தை அளிக்கிறது.
இந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பது குறித்து ஆவண செய்ய வேண்டும். இந்த விழாவை, சிறிய விழாவாக நடந்துவது சிவாஜியை அவமதிப்பாக கருதுகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக சென்னை அடையாறு பாலம் அருகே மணி மண்டம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தில் நான்கு புறமும் வாசல் வைத்து, திராவிடர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிற்ப கலை வேலைப்பாடுகளுடன் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டப நடுவில் சிவாஜி கணேசன் சிலை, உட்புறத்தில் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் இடம் பெறுகிறது.
இந்த மணி மண்டபத்தை சிவாஜிகணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு சிவாஜி குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.