அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள். இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்த மன்னருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளைப் பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்.
இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு சுந்தர்ராஜபெருமாளைப் பார்க்கச் செல்ல இயலாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளைப் பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, “மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்” எனக் கூறி மறைந்தார்.
மன்னனும் பெருமாள் கூறியபடி கோயில் கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என குழம்பினான். பெருமாள் மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவேதான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பெருமாளைப்போலவே இங்கு அனுமன் மிக விசேஷம். இந்த அனுமனுக்கு சாற்றப்படும் வடை மாலை ஒருமாதம் ஆனாலும் கெடாது. ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப்பெருமாள் போல பெருமாள், தாயாரிடம் சென்று திருமணம் முடிப்பார். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம். மறுபடியும் ஒரு இராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இத்தல ஆஞ்சநேயர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார்.
சீதையைத் தேடிய வானர வீரர்கள் இங்குள்ள பிருந்தாவன் என்ற இடத்திலிருந்த மரத்தின் சுவை மிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டகியது. இராமர் வந்து அவர்களை ஊக்கப்படுத்தி வீரர்களாக்கினார். எனவே தான் இத்தலம் வானரவீர மதுரை என பெயர் வந்தது. பின் அது மருவி மானாமதுரை ஆனது.
மூலவர் சுந்தர்ராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள்பாலிக்கிறார். தாயார் சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு. இத்தலம் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
மதுரை அழகர்கோவிலைப்போலவே, சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 4ம்நாள் எதிர்சேவையும், 5ம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பவுர்ணமியில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, பகற்பத்து இக்கோயிலின் முக்கிய விசேஷங்களாகும்.
கோரிக்கைகள்:
திருமணத்தடைநீங்க இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், காரியத்தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாற்றலாம்.
அதேபோல் வறுமையை விரட்ட இங்குள்ள மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமைகளில் தாமரைத்திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மீனாட்சியை வழிபட்டு மஞ்சள், குங்குமம் காணிக்கை கொடுத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கப் பெறலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.