தேனி

ஆளுநரின் கருத்துக்குப் பதில் சொல்ல எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவதாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 1,066 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.

பிறகு கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதன் பின்னர், வீரபாண்டியில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்

உதயநிதி ஸ்டாலின் தனது உரையில்,

”ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் சென்று, தமிழ்நாட்டில் ஆரியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது என்று பேசி இருக்கிறார். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு அவர், இதுகுறித்து பதில் சொல்ல முடியாது. அதற்கு நிறையப் படித்து இருக்கவேண்டும். இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார் 

அவர்.தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைவர். அவருடைய கட்சி பெயரில் அண்ணா இருக்கிறது, திராவிடம் இருக்கிறது. ஆனால், இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார். அவருக்கு அவ்வளவு பயம். 

பாஜகவுடன் கூட்டணி முறிந்து விட்டது என்று அதிமுகவினர் புதிதாக நாடகம் ஆடுகிறார்கள். ஆனால் திமுகவைப் பொறுத்தவரை நீங்கள் ஒன்றாக வந்தாலும் வெற்றி பெறப்போவது நாங்கள்தான். நீங்கள் தனித் தனியாக வந்தாலும் ஓட விடப்போவது திமுக தான்.” 

என்று கூறி உள்ளார்.