ராமநாதபுரம்:
தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் கேட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை துவக்கினார். துவக்கிய கையோடு, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, திருவாடானை இரட்டையிலை சின்னத்தில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.
நடிகரான இவர், எம்எல்ஏவான பிறகும், சென்னையிலேயே தொடர்ந்து தங்கிவிடுகிறார். தொகுதி பக்கமே வருவதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன் ராமநாதபுரத்துக்கு சென்ற கருணாஸ், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளால் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நீங்களோ தொகுதி பக்கமே வருவதில்லை” என்று புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமான கருணாஸ் ஏதோ சொல்லப்போக, பதிலுக்கு அந்த நபர் ஏதோ சொல்ல வாக்குவாதம் முற்றியது.
தனக்கு வந்த எண்ணை குறிப்பிட்டு காவல்துறையில் கருணாஸ் புகார் தெரிவித்தார். இதையடுத்து திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அகிலனோ, “தொகுதபக்கமே வர்றதில்லையேனு கேட்டது ஒரு குத்தமாய்யா” என்று புலம்பியபடியே காவலர்களுடன் சென்றார்.