1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கு காரணமாகப் பட்டறையை இழுத்துப் பூட்டிய முதலாளி, ‘’ ஊருக்குக் கிளம்பி போ’’ என்று சொல்லி 500 ரூபாய் கொடுத்துள்ளார்.

மார்ச் 21 ஆம் தேதி, சவுத்ரி பாட்னா செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தார்.

 டிக்கெட் கட்டணம் 445 ரூபாய்.

 கையில் மிச்சம் 45 ரூபாய் மட்டுமே இருந்தது.

கொஞ்ச தூரம் சென்ற ரயிலை ஊரடங்கைக் காரணம் காட்டி ஏதோ கிராமத்தில் நிறுத்தி விட்டார்கள்.

அதிர்ந்து போனார், சவுத்ரி.

ரயில் பெட்டியில் தன்னுடன்  பயணித்த சிலருடன் சேர்ந்து சொந்த ஊருக்கு நடக்க ஆரம்பித்தார்.

 வழியில் போலீசாரின் குடைச்சல்.

மும்பையில் சுகாதார அதிகாரிகள் கொடுத்த சான்றிதழைக் காட்டி, ஒவ்வொரு ஊராக கடந்தார்.

போகும் பாதையில் தர்மவான்கள் அளித்த பிஸ்கட்களை சாப்பிட்டுப் பசியாறினார்.

27 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு கடந்த வாரம் சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.

இங்கு வந்த பிறகுதான், ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரம் தான் நடந்து வந்திருப்பது ,அவருக்குத் தெரிந்துள்ளது.

இரும்பு பட்டறையில் வேலை பார்த்ததால், உடம்பும் இரும்பாகி திடமாக இருந்ததால், சவுத்ரியால் இவ்வளவு தொலைவு நடக்க முடிந்துள்ளது, என்கிறார்கள் உள்ளூர் டாக்டர்கள்.

மகன் மும்பையில் இருந்து வந்துள்ள தகவலை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார், சவுத்ரியின் தந்தை.

அங்குள்ள அரசு மருத்துவமனையில் சவுத்ரியைச் சேர்த்துள்ள அதிகாரிகள், 14 நாள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்