கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு பாஜகவினரை அவர் மருமகன் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டு கோவிலுக்குச் சென்ற மம்தா பானர்ஜி அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.  மம்தா தம்மை நான்கு அல்லது ஐந்து பேர் தள்ளிவிட்டு காயப்படுத்தியதாகவும் அப்போது காவலர் யாரும் உடனில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரால் நடக்க முடியாமல் திணறிய போது அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை காரில் தூக்கி உட்கார வைத்துள்ளனர்.  அவரிடம் செய்தியாளர்கள் இந்த தாக்குதல் குறித்துக் கேட்ட போது அவர், ”இது திட்டமிட்ட தாக்குதல் ஆகும்.  நீங்களே என்னைச் சுற்றி காவல்துறையினர் யாரும் இல்லை என்பதைப் பார்க்கலாம்.  எனது கால் கடுமையாக வீங்கி உள்ளது” எனத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள எஸ் எஸ் கே எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பாதம், தோள், மற்றும் கழுத்தில் அடிபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  மேலும் அவருக்கு நெஞ்சு வலி உள்ளதாகவும் அவர் கூறியதால்  அவரை 48 மணி நேரம் கண்காணிப்பில் வைத்துள்ளனர்..  நேற்று இரவு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

மம்தாவின் மருமகனும் திருணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி தனது டிவிட்டரில் காலில் கட்டுடன் மம்தா படுத்திருக்கும் புகைப்படத்தைப் பதிந்துள்ளார். அத்துடன் அவர்  ”மே மாதம் 2 ஆம் தேதி அன்று வங்க மக்களின் சக்தியை பாஜக ஆகிய நீங்கள் எதிர் கொள்வீர்கள்,  தயாராய் இருங்கள்” எனப் பதிந்துள்ளார்.

ஆனால் மேற்கு வங்க மாநில பாஜக தனது டிவிட்டரில் “மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதைக் கண்ணால் கண்ட  ஒரு சாட்சி கூட இல்லை.   தங்கள் மீது குற்றம் சுமத்தி தங்களை இழிவு படுத்துவதாக மம்தா மீது நந்திகிராம் மக்கள் கோபத்தில் உள்ளனர்.   அவர் நந்திகிராம் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளார் என்பதால் நடுங்குகிறார் என்பது தெளிவாக உள்ளது” என டிவிட்டரில் பதில் அளித்துள்ளது.