கொல்கத்தா:

மக்களவை தேர்தலின்போது உடைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.


கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

அமித்ஷா பேசிக் கொண்டிருக்கும்போதே பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் இது வன்முறையாக உருவெடுத்தது.

வன்முறை வெடித்ததையடுத்து, அமித்ஷா பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
கலவரத்தின்போது, வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், புதிய வித்யாசாகர் சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. திறந்த ஜீப்பில் வந்து சிலையை மம்தா பானர்ஜி திறந்துவைத்தார்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, வித்யாசாகர் சிலையை பாஜக நிறுவும் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த மம்தா, சிலை நிறுவ யாரிடமும் யாசகம் கேட்கமாட்டோம். அரசே அதே இடத்தில் வித்யாசாகரின் சிலையை நிறுவும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படியே இன்று வித்யாசாகர் சிலையை மம்தா திறந்து வைத்தார்.
அதோடு, கலவரத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தாருக்கு இழப்பீடும் வழங்கினார்.