கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று மதியம் டார்ஜிலிங் மாவட்டம் பஹ்டொக்ராவில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் மூலம் ஜல்பைஹுரிக்கு பயணம் மேற்கொண்டார்.

ஆனால் கனமழை பெய்ததுடன் மோசமான வானிலையும் நிலவியதன் காரணமாக மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் ஷலுஹராவில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பிறகு மம்தா பானர்ஜி அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.