சென்னை: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்ட இருப்பதாகவும், அதன்படி,  10 ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வரும் 24ந்தேதி முதல் சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எந்தெந்த ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில்  கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்று பாதையில் செல்லும் ரயில்கள்

செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்: செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16848), ஜனவரி 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும்.

கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது.

மறுமார்க்கமாக, மயிலாடுதுறையில் இருந்து வரும் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16847), ஜனவரி 30ஆம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செங்கோட்டை செல்லும். மேற்குறிப்பிட்ட நிலையங்கள் வழியாக செல்லாது.

நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் : நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321), ஜனவரி 25,28 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், ஈரோடு வழியாக செல்லும்.

திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16322), ஜனவரி 25,28 ஆகிய தேதிகளில் இதே வழித்தடம் வழியாக செல்லும்.

நாகர்கோவிலில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்: நாகர்கோவிலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340), ஜனவரி 28ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மும்பை செல்லும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது.

நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), ஜனவரி 30ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லாது.

குருவாயூர் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்: குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), ஜனவரி 24, 27, 29 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் வழியாக செல்லாது.

கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்: கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (12666), ஜனவரி 25ஆம் தேதி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

நாகர்கோவில்-காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்: நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16354), ஜனவரி 25ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக காச்சிகுடா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயில்: உத்தரபிரதேச மாநிலம் பனாரசில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயில் (06368), ஜனவரி 26ஆம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லாது.

பகுதி நேர ரத்து மற்றும் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்

சென்னை மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ்: சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), ஜனவரி 25, 28 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து ஜனவரி 25, 28 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

ஈரோடு செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிஸ் ரயில் (16845), ஜனவரி 24, 27 ஆகிய தேதிகளில் கரூர் – செங்கோட்டை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, 28 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846), அதற்கு மாற்றாக கரூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.

குஜராத் ஓகா – மதுரை சிறப்பு ரயில்: குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரயில் (09520), ஜனவரி 27ஆம் தேதி விழுப்புரம் – மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 31ஆம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (09519), அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும்”.

இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.