https://www.instagram.com/p/B90tz6unroJ/

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு :- ”கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை. கடினமான முடிவுதான். ஆனால், அதை எடுக்க வேண்டும். சமூக வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். இந்த நேரத்தை உங்களுக்குப் பிடித்தவர்களுடன், உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள். இது இந்தக் கிருமி பரவாமல் தடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றும்.

உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை, சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சானிட்டைஸர்களை அதிகம் பயன்படுத்துங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் மட்டும் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள். இந்தத் தொற்று காணாமல் போகும் வரை நாம் தேவையான வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். நாம் அனைவரும் இதில் சேர்ந்து இருக்கிறோம். இதை இணைந்தே எதிர்கொள்வோம். அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19ஐ தோற்கடிப்போம். பாதுகாப்புடன் இருங்கள்’ என கூறியுள்ளார்.