கீழ்ப்பாக்கம்:  சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை  போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை செனாய் நகர் ஜார்ஜ் பள்ளிமீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து,  சென்னையில் மகரிஷி வித்யா மந்திர்  பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியரான ஆனந்தன் என்பவர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து ஆசிரியர் ஆனந்தனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை ஆசிரியர் மீது மாணவர்கள் யாரும் புகார் கொடுக்காததால், அவர்மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளியில்  பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் ஆசிரியர் ஆனந்தனை  கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.