‘’கங்கனாவை சந்திக்கும் ஆளுநரால் விவசாயிகளை சந்திக்க முடியாதா? சரத்பவார் கடும் தாக்கு..

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து,பிரமாண்ட பேரணி நடத்தி மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் மனு அளிக்க அந்த மாநில விவசாயிகள் திட்டமிட்டனர்.

 இதற்காக மகாராஷ்டிர விவசாயிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று மும்பை வந்தனர்.

ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்குள்ள ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் திரண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்’’ வேளான் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் அவசர கதியில் மத்திய அரசு நிறைவேற்றி விட்டதாகக் குற்றம் சாட்டினார்.

’’மகாராஷ்டிர ஆளுநர்  பகத்சிங் கோஷ்யாரிக்கு நடிகை கங்கனாவை சந்திக்க நேரம் உள்ளது.   ஆனால் விவசாயிகளைச் சந்திக்க மறுக்கிறார். இது என்ன நியாயம்? ’’ என சரத்பவார் கேள்வி எழுப்பினார்.

‘’ இவர் போன்ற ஆளுநரை மகாராஷ்டிர மாநிலம், தனது சரித்திரத்தில்,பார்த்ததே இல்லை’’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்..