மகா கும்பமேளாவின் கடைசி நாளான நாளை மகாசிவராத்திரியை ஒட்டி பிரயாக்ராஜ் நகரில் இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது.
இன்று காலை 10 மணி வரை சுமார் 51 லட்சம் பக்தர்கள் வந்து குவிந்ததாகக் கூறப்படுகிறது.
நகருக்கு வெளியே 10 கி.மீ. தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திரிவேணி சங்கமம் வரை செல்ல வேண்டாம் எனவும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகளில் ஆங்காங்குள்ள படித்துறைகளில் நீராடிவிட்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பிரயாக்ராஜ் நகரின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் வாகனங்களை மெதுவாக அகற்றி வருகின்றனர்.
நாளை முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இன்று மாலை 6 மணிக்குப் பிறகு பிரயாக்ராஜ் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் கண்காணிப்புக்காக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மகா கும்பமேளாவில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், கத்ரீனா கைஃப் ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.
ஜனவரி 13 முதல் தற்போது வரை 44 நாட்களில் 63.36 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த விழாவில் புனித நீராடியுள்ளனர். திங்கட்கிழமை 1.30 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடினர்.