சென்னை; மகாசிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை, காளகஸ்திக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் வரும் 18-ந்தேதி மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி 18-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் இந்துக்கள் தங்கள் குல தெய்வத்தை வழிபடும் சிறப்பு தினமாக கருதி அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் அன்று மக்கள் கூடி இரவு முழுவதும் வழிபாடு செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. சிவராத்திரி விழாவை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள காளகஸ்தி மொகிலி ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதுபோல காலஹஸ்தி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சனிக்கிழமை காலையில் இருந்தே வழக்கமாக செல்லும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் தேவையை கருதி பஸ் வசதி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலை, காலஹஸ்திக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்