காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரியின் முழு கொள்ளவான 23 அடியில் தற்போது 20 அடி நீர் உள்ளது.  இதன் காரணமாக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஏரியில் இருந்து திறந்துவிடப்படும்,  நீர் கிளியாற்றின் வழியாக செல்கிறது. இதன்  ஆற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணையின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான  கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முன்னூத்திக்குப்பம், முள்ளி, வளர்பிறை, முருக்கச்சேரி, வீராணகுண்ணம், குன்னத்தூர், தச்சூர், நீலமங்கலம், மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், கினார் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுக்காலனி, இருசாமநல்லூர், கே.கே.பூதூர், பாத்திமா நகர், பூண்டி நகர், சகாய நகர், ஈசூர் ஆகிய கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மதுராந்தகம் ஏரி உள்பட  170 ஏரிகள் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது.