மதுரை:

திமுகவிற்கு ஒரே தலைமைதான் தேவை, இரண்டு தலைமை தேவையில்லை என்று மதுரை வடக்கு மாவட்ட அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கி  உள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு கட்சி உடைந்து, பின்னர்  மீண்டும் இணைந்து தற்போது இரட்டை  எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக  கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகள் தொய்வடைந்து உள்ளது.

ராஜன் செல்லப்பா -அதிமுக எம்எல்ஏ

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வியை அதிமுக எதிர்கொண்டது. இதற்கு காரணம்  அதிமுக தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாதது என்று கூறப்பட்டது. அதுபோல மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம்  கிடைக்காததற்கு, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் ஈகோதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியளார்களை சந்தித்த மதுரை முன்னாள் மேயரும், மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான  ராஜன் செல்லப்பா, அதிமுகவிற்கு ஒரே தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் மற்றொருவரை நியமிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவைவிட  அதிக திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தவர், அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதிகாரமிக்க ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பேர் இருப்பதால் முடிவுகளை உடனடியாக எடுக்க முடியவில்லை என்றார்.  இதற்காக, அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய ராஜன் செல்லப்பா,  கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐயும் கடுமையாக சாடினார்.  சுயநலம் இல்லாத மக்கள் பணியாற்றக்கூடிய தலைமை வேண்டும் அது  எந்த செல்வாக்குள்ள கட்சியாக இருந்தாலும், அதிகாரமிக்க தலைமை வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

”ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் 10 முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்கு உள்ளான அமைச்சர் கள் மாற்றப்பட்டார்கள். ஆனால், அதிகாரம் மிக்க தலைமை இல்லாத நிலையில், புகார்களுக்கு உள்ளாகும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில்  வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்?  அவர்களை தடுத்தது யார்” என்றும் கேட்வி எழுப்பினார். கட்சியில்  எந்த பூசல் இருந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்ல மாட்டோம் என்றவர்,  அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் மக்களிடையே குழப்பம் உள்ளது. அதுபோல கட்சி தொண்டர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாகவே அதிமுக தோல்வியை சந்தித்தது என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலோடு தினகரன் எனும் மாயை நீர்த்துப் போய்விட்டதாகவும், இதே போல் கட்சியில் இல்லாத சசிகலாவும் மீண்டும் தலைமை பொறுப்பேற்க வர வேண்டும் என்கிற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்ட தாகவும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

ராஜன் செல்லப்பாவின் திடீர் போர்க்கொடி எடப்பாடி அரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக  அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவது வெட்ட வெளிச்சமாகியது.

ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.