மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நேரத்தில் ஏராளமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர்.

இதனையடுத்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துவரும் நிலையில் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5 ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.