துரை

ன்று மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நேற்று காலை  சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து இதைத் தரிசனம் செய்தனர்.

இன்று சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளாகும்.  இதையொட்டி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.  பக்தர்கள் ஹர ஹர சங்கரா சிவாய சங்கரா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி தேரை இழுத்து வருகின்றனர்.   இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்து வருகிறார்.

தவிர சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.  நேற்றைய திருக்கல்யாணத்தைக் காணமுடியாத பக்தர்களுக்குச் சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.  தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.