20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

Must read

மதுரை:
துரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும் கார் பரிசை பெற்றார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு, கொரோனாபரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கொரோனாஇல்லை என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

பாரம்பரிய முறைப்படி தை முதலாம் தேதி அதாவது ஜனவரி 14-ல் மதுரை அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 17-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். மூன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துதான் ஆன்லைன் பதிவுகள்நடைபெற்றன.இந்த ஆன்லைன் பதிவில் பங்கேற்பதற்கான பதிவின் அடிப்படையில் முன்னுரிமை அனுமதி வழங்கப்படும்.

தை முதல்நாளான இன்று தமிழக மெங்கும் பொங்கல் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவரும் வேளையில், இன்றுகாலை 8 மணியளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கொரோனாவிதிமுறைகளுடன் இனிதே தொடங்கியது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அனுமதிக்கப்பட்டிருந்த 300 மாடுபிடி வீரர்களில் சுற்றுக்கு 50 வீரர்களாக களமிறக்கப்பட்டனர்.

அவனியாபுரத்தில் நடைபெற்ற இன்றைய ஜல்லிக்கட்டு நிகழ்வில் மொத்தம் 624 காளைகள் கலந்துகொண்டன. இன்று முழுவதுமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை ஆன்லைன் பதிவு செய்த பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளித்தனர். எனினும்இதில் ஒரு சோகம், ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கவந்தவரில் ஒருவரை சீறிவந்த காளை அவரது மார்பில் முட்டியதாகவும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 காளை அடக்கிய இளைஞர் கார்த்திக்கு முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு முதல்வர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 19 காளைகளை அடக்கிய முருகன் 2வது இடமும், 12 காளைகளை அடக்கி பரத் குமார் 3வது இடமும் பெற்றனர்.

More articles

Latest article