மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,889 பதிவு செய்யப்பட்ட மதரசாக்கள் உள்ளன. இவற்றில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, மராத்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மத பாடத்திட்டங்களை நடத்தும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான ஆசிரியர் சம்பளம், அடிப்படை உள்கட்டமைப்பு, நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வுக் கூடம் உள்ளிட்டக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தில் சேர பெரும்பாலான மதரசாக்கள் ஆர்வம் காட்டவில்லை. வெறும் 114 மதரசாக்கள், அதாவது மொத்த எண்ணிக்கையில் 7.6 சதவீத மதரசாக்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்துள்ளது. இவற்றுகு 2017&18ம் நிதியாண்டில் ரூ.5.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை பெற ஒவ்வொரு ஆண்டு மதரசாக்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இது குறித்து மாநில சிறுபான்மை நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்த திட்டத்துக்கு மதரசாக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அரசின் நிதியை ஏற்றுக் கொண்டால் பிற்காலத்தில் மதரசாக்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று எழுந்துள்ள அச்சம் தான் இதற்கு காரணம். எனினும் மதரசாக்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பதை அவர்களுக்கு புரியவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

இது குறித்து அகில இந்திய உலமா கவுன்சில் பொதுச் செயலாளர் மவுலானா மெஹ்முத் தார்யாபதி கூறுகையில், ‘‘மத போதனை மையத்துக்கு அரசின் உதவி தேவையில்லை. மாநில அரசு எப்போது பலவிதமான முடிச்சுகளோடு தான் ஒரு திட்டத்தை கொண்டு வரும். எதிர்காலத்தில் அரசின் உத்தரவுப்படி மதரசாக்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடம். குறிப்பாக பள்ளி சுவர்களில் படங்கள் தொங்கவிடுவது, அறிக்கை சமர்ப்பித்தல் போன்றவற்றில் அரசு மூக்கை நுழைக்கும்’’ என்றார்.