சென்னை:  சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்,  போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி,  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும்  விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம்  உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அமைச்சர்  பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்றம் விடுவித்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜூன் மாதம் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே முழு விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு:

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரை திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.  அப்போது அவர் சைதாபேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக  2003ம் ஆண்டு புகார் எழுந்தது. அப்போது அமைச்சராக இருந்த  பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அந்த பகுதியில் சட்ட விரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்பவரை வெளியேற்றியதாகவும் போலியாக ஆவணங்கள் தயாரித்து,  அந்த இடத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில்பதிவு செய்ததுடன், அதில்  ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு புதிய கட்டிடம் கட்டியதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார்மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி பொன்முடி மாமியார், அப்போதைய அடையாறு பதிவாளர் புருபாபு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு ( 27.8.2003)  வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக பல கட்ட விசாரணை முடிந்த நிலையில் 2.9.2004ல் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி 2007ம் ஆண்டு  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 26.4.2007 அன்று அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி மீதான வழக்கில் ஆதாரம் இருப்பதால், அவரை  வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த 2017ம் ஆண்டு ( 6.9.2017)  ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்.பி, எம்.எல்ஏக்கள் மிதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, திமுக மாவட்டச் செயலாளராக இருந்த சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.

இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது. 180க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.  ஆனால்,  வழக்கில் போதிய ஆதாரம் இல்லை, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ஜெயவேல் பொன்முடி உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களின் மீதான நம்பகத்தன்மை பொய்த்து போவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், இஎம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வருகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.