கரூர்: செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, அவரது தம்பி கரூரில் புதிதாக கட்டி வரும் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களாவில் சோதனை நடத்திய நிலையில், அதை முடக்கி சீல் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்,  கரூர் – சேலம் புறவழி சாலையில், ஆண்டான் கோயில் கிழக்கு, மண்மங்கலம் தாலுகாவில் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில்  300 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  2.49 ஏக்கரில் பிரமாண்டமாக புதிய பங்களா கட்டி வருகிறார். அந்த  வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, அதை  அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது தொடர்பான நோட்டீஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையினரின் விசாரணையில் உள்ள நிலையில், அவரது தம்பி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாவில்லை. இதையடுத்து,  அவரது தம்பி அசோக்   புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.  அதைத்தொடர்ந்து, 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.  அந்த நோட்டிசில் லட்சுமி, நிர்மலாவிற்கு அந்த வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்றும், இந்த வீடு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டை வேறொரு பெயரில் மாற்றவோ, விற்கவோ கூடாது என்று சார்பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வீடு முடக்கப்பட்ட நோட்டீஸ் நிர்மலாவுக்கு அனுப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும்,  அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவது  குறிப்பிட்டத்தக்கது