சென்னை: அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம்  ஏற்க மறுத்துவிட்டது.

தனது மீதான அமலாக்கத்துறை  விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு சென்னை அமர்வு நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை  எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிய நிலையில்,  மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது  உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்பட்டு மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையின் அதிரடி விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்,  திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.  அவர் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு மேல் சிறியிலேயே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அவரது வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி சென்னை அமர்வு  நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஹ

இந்த மனுமீதான விசாரணை அமர்வு  நீதிபதி எஸ். அல்லி முன்னிலையில் நடந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் , மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதாடினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், ‘வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதம் முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி எஸ். அல்லி தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனறும் அதற்காக செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அதிரடி காட்டினார்.

இந்த நிலையில், தன்மீதான விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி ஆனதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.  மேலும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

ஆனால், செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ம்.எஸ் ரமேஸ், சுந்தர் மோகன்  அமர்வு, மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க  முடியாது தெரிவித்துள்ளது. வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்பட்டு மனு விசாரிக்கப்படும் என்றும் வரும் 19ந்தேதி விசாரணைக்கு வரும் என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் விசாரணையை 21 ஆம் தேதிக்கு மாற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது முறையீட்டை ஏற்று  , மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதி  நடைபெறும் என நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விடும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.