மதுரை:

தென் மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை மீண்டும் வழங்குவது குறித்து  பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு  மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய  துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு விசாரணை  மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இன்று நடந்தது.

வழக்கறிஞர்கள் கே.கே.ரமேஷ், முத்துக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் இணையதள சேவை முடக்கம் என்பது ஏற்புடையது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் முடக்கப்பட்டுள்ள வலைதள சேவைகளை மீண்டும் வழங்குவது குறித்து அரசு  பரிசீலிக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிக்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.