சென்னை:
ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிதி கையாடல் தொடர்பான வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலாண்மை ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் கையாடல் செய்வதாகக் கூறி, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், தணிக்கை குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
தணிக்கை குழுவினர் அளித்த அறிக்கையில் எஸ்சி., எஸ்.டி. மாணவர்களின் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடி அளவுக்கு கையாடல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த அறிக்கையின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகையை நிறுத்திய முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.