சென்னை:

மிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால் லாரிகளின் டெண்டர் தொடர்பான பிரச்சினை காரணமாக, ஆவின் நிர்வாகத்துக்கு பால் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. மீண்டும் ஒப்பந்தம் போடுவது தொடர்பாக கால தாமதம் ஏற்பட்ட நிலையில், பழைய ஒப்பந்த அடிப்படையிலேயே 6 மாதங்கள் லாரிகளை இயக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் மாதத்துடன் அவகாசம் முடிவடைந்த நிலையில்,பெ டெண்டர்மீண்டும் புதிய ஒப்பந்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக 6 மாத காலம் பழைய டெண்டர் விதிமுறைப்படியும், அதே வாடகைக்கும் டேங்கர் லாரிகளை இயக்குமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், லாரி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்துடன் இந்த காலஅவகாசம் முடிந்தும், டெண்டர் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசு டெண்டரை ரத்து செய்தது. இதனால்  அதிருப்தி அடைந்துள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டதை அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள பால் டாங்கர் லாரி உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசு தரும் வாடகை போதுமானது இல்லை. மேலும், ஆவின் நிர்வாகம் சுமார் ரூ.20 கோடி வரை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் லாரி டிரைவர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியவில்லை.

இந்த நிலையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே,  வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும்  கோரிக்கை வைத்து, அதற்கு பதில் அறிவிக்காத நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.

அதன்படி,  நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து காலவரையற்ற போராட்டம் தொடங்குகிறது.

இதனால் ஆவினுக்கு தினசரி வரும், சுமார் 20 லட்சம் லிட்டர் பால் வருவது நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஆவின்   பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.