சென்னை:
ருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. தீர்ப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து உத்தரவிட்டுள்ள  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு, தீர்ப்பு குறித்து தவறான தகவல்கள் வெளியிட வேண்டாம் என ஊடகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி  அனைத்துக்கட்சிகள் சார்பில் தொடரப்பட் வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக, அதிமுக, உள்பட பல்வேறு  அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை தலைமைநீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து கடந்த விசாரணை யின் போது திமுக சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும்
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் என்று வாதிடப்பட்டது. அதையடுத்து,  தமிழக அரசு, தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறானது.
மேலும் தமிழகத்தில் தான் அதிகமான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். உச்ச நீதிமன்றம், சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என்றும், எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என இறுதி வாதத்தின்போது கூறியிருந்தார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவு எடுக்க முடியும். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு
நடத்தும் அமைப்பு மட்டுமே மத்திய அரசு. மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று ஆணித்தரமாக கூறினார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும் என வாதிட்டனர். மேலும் பல கட்சிகள் சார்பிலும் பிரபல வழக்கறிஞர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இன்று  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதன்படி,
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம்.
இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது.
மத்திய அரசின் கல்வி நிலையங்கள் அல்லாத கல்வி நிலையங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தவிதமான தடையும் இல்லை.
மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளாது. ஆனால் எந்தவிதமான சட்டத்தையும் உருவாக்கவில்லை.
மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
மூன்று மாதங்களில் அதனை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஊடங்களுக்கு வேண்டுகோள் விடுத்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார
அப்போது, திமுக வழக்கறிஞர் ஏ.பி.வில்சன் எம்.பி., சமூக நீதியை நிலைநிறுத்த வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள் என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி,  சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவ்வளவுதான்.
இவ்வாறு வாதங்கள் நடைபெற்றது.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தின்போது, டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு குறித்தும் தவறான கருத்துக்கள் பரப்பக்கூடாத என்ற நோக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.