சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி, கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், ஆகஸ்டு 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று கட்சியின் ஒருங்ணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனன்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
இதையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான அண்ணன் இ. மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் விசுவாசமிக்க தொண்டர்; புரட்சித் தலைவருக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த ரசிகர்: புரட்சித் தலைவர் கண்ட பேரியக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த கழக உடன்புறப்பு: புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி: கழகத் தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்துக் கொண்டாடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களில் என பலவாறாகவும் அண்ணன் மதுசூதனன் அவர்களைப்பற்றி வரலாறு சொல்லும்.
கழகத்தின் சோதனையான காலக்கட்டங்களில் கழகத்தைக் கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய கழகத்தின் தூண் சரிந்ததே என்று கண்ணீர்க் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரது இழப்பு கழத்திற்கும், புரட்சித் தலையரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
கழக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களின் மறைவையொட்டி 5.8.2021 முதல் 7.8.2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதே போல், தமிழ் நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழகக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும்; அனைத்து கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.