சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை கறுப்புகொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா? என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “நான் வரும்போது திண்டுக்கல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஸ்டாலின் பேசியதைப் பார்த்தேன். வீர வசனம் பேசுகிறார். அதை பார்க்கும் போது, திரைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை காட்சிதான் என் நினைவுக்கு வந்தது. சுந்தர்.சி நடித்த படம் அது.
அதில் சுந்தர்.சி அவர்களும், வடிவேலுவும் பேசுவார்கள். ‘எங்க ஏரியாவுக்கு வந்து பார்’ என்பார் வடிவேலு. அவர் சொன்ன ஏரியாவுக்கு சுந்தர். சி செல்வார். இதை பார்த்ததும், ‘ஏரியாவுக்கே வந்துட்டியா… அடுத்து எங்க தெருவுக்கு வந்து பார்’ என்பார். அடுத்து தெருவுக்கு வந்து, பின்னர் வடிலுவேலு வீட்டுக்கே செல்வார் சுந்தர். சி. அவரை பார்த்ததும் சுந்தர். சி காலில் விழும் வடிவேலு, ‘மன்னிச்சுக்ய்யா, வீரமாக பேசுனது எல்லாம் வெறும் பில்டப் யா’ என்று சொல்வார். அதுபோல தான் ஸ்டாலினும். ஸ்டாலின் அவர்கள் ஒரு டம்மி பீஸ். கருணாநிதி ஆட்சியில், இந்த மதுரை மண்ணில் உங்களால் கால் வைக்க முடிந்ததா? முடியவில்லை.
இப்படி வீர வசனம் பேசுவதை விட்டுவிடுங்கள். பழைய திமுகவை பார்ப்பீர்கள் என்கிறார், அதுதான் பார்த்துவிட்டோமே… நீங்கள் தான் மதுரைக்கே வர முடியலையே” என கடுமையான சாடினார்.
மேலும், திமுக ஆட்சியில் மதுரையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மாநகராட்சியில் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யவே வரி வசூல் செய்திருக்கிறார்கள். வீட்டு வரி, கடை வரி, தண்ணீர் வரி, குப்பைக்கும் வரி போட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியிலே வரி வசூலில் முறைகேடு நடந்ததாக நாம் சொல்லவில்லை; ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் கணவர் கைது செய்யப்பட்டார். மேயரும் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது யாரும் இல்லாத மாநகராட்சியாக மதுரை உள்ளது. இது, எவ்வளவு பெரிய ஊழல் என்று மதுரை மக்களே எண்ணிப்பாருங்கள்.
இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா? எவ்வளவு பெரிய அசிங்கம் இது? வரிப்பணத்தை சுரண்டும் அரசு தேவையா? மதுரை மக்கள் சிந்திக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தில் இப்படிப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா?” என தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் அ.தி.மு.க. நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் டி.டி.வி.தினகரன் அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள். மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், “ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா” என்று சவால் விட்டவர், கடைசியில் “மன்னிச்சுப்பா… ஒன்லி பில்டப்பா” என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
நாளை கருப்புக்கொடி போராட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா? பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின் அவர்களே…
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]