சென்னை:

அதிக கட்டணம் என்பதால் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சொகுசு ரெயில்களுக்கு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இதன் கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மகாராஜா எக்ஸ்பிரஸ், பேலஸ் ஆன் வீல்ஸ் போன்ற சொகுசு ரெயில்களின் இயக்குதல் செலவை 50 சதவீதம் வரை குறைக்க பிராந்திய ரெயில்வே நிர்வாகங்களுக்கு ரெயில்வே வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.

பிராந்திய ரெயில்வே நிர்வாகங்கள் இந்த ரெயில்களில் இயக்குதல் கட்டணம் அதிகளவில் வசூலித்து வருகிறது. ‘‘சொகுசு வசதிகளுடன் கூடிய சுற்றுலா ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீத குறைவுக்கு இயக்குதல் கட்டணம் அதிகளவில் வசூலிப்பது தான் காரணம்’’ என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஜா எக்ஸ்பிரஸ், கோல்டன் சாரட், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ். டெக்கான் ஒடிசி, பேலஸ் ஆன் வீல்ஸ் போன்ற சொகுசு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி தற்போது வலியுறுத்தியுள்ளது.

2017ம் ஆண்டு காரைக்குடி, மகாபல்லிபுரம், ஹம்பி, கோவா, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லக்கூடிய மும்பை&திருவனந்தபுரம் மகாராஜா எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 18 டி க்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டது. திரும்பி வரும் போது ஒரு டிக்கெட் கூட முன்பதிவாகவில்லை. இதில் ரூ.3.77 லட்சம் முதல் ரூ.17.33 லட்சம் வரை டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 8 பகல், 7 இரவு அடக்கம். இது தான் இந்த திட்டம் தோல்வி அடைவதற்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது. இதில் உணவு மற்றும் குளிபர்பானங்கள், சுற்றுலா மையம் பார்வையிடல், 5 நட்சத்திர அ ந்தஸ்துடன் ரெயிலில தங்கும் வசதி ஆகியவை அடக்கம். வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளை குறிவைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இத்தகைய பெருந்தொகையை அவர்களால் தான் செலுத்த முடியும் என்று ரெயில்வே கணக்கிட்டது.

இந்நிலையில் இந்த ரெயிலில் 30 சதவீதம் மட்டுமே பயணிகள் செல்கின்றனர். மீதமுள்ள இருக்கைகள் ரெயில்வே அதிகாரிகளுக்கு அன்பளிப்பு முறையில் வழங்கப்பட்டு இலவச பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.