மும்பை:

விடைத்தாள் கசிந்த விவகாரத்தில் மறு தேர்வு எழுத குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு மற்றும் பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஆகியற்றின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியாகிவிட்டது. இதனால் கடும் கண்டனத்திற்கு சிபிஎஸ்இ ஆளானது. மாணவர்கள் நலன் கருதி விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அதன் தலைவர் தலைவர் அனிதா கர்வா தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ‘‘இது அரசின் தோல்வி. இதை ஏற்றுக் கொள்ளாமல் ஏன் மாணவர்கள் மறு தேர்வு எழுத வேண்டும்?’’ என்று ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் நாடு முழுவதும் உள்ள பெற்றோர் இந்த மறு தேர்வை எழுத தங்களது குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பொறுப்பேற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

‘‘எதிர்பாராதவிதமாக கேள்வி தாள் வெளியாகிவிட்டது. இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிக்க முடியாது’’ என்று பிரகோஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ‘‘இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது சிபிஎஸ்இ எவ்வளவு அலட்சியமாக தேர்வுகளை கையாளுகிறது என்பதற்கு உதாரணமாகும்’’ என அகில இந்திய ஜனநாயக மக்கள் அமைப்பின் டில்லி பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் மாணவர்கள், தனியார் பயிற்சி மைய ஆசிரியர்களும் அடக்கம். இவர்களிடம் இருந்து 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பயிற்சி மைய ஆசிரியர் ஒருவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.