முத்தலாக் குறித்து நாடு முழுவதும் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் வேளையில் மத்திய அரசின் முத்தலாக்கிற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் நடத்திவரும் கையெழுத்து வேட்டையை அகில இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வன்மையாக கண்டித்துள்ளது. இது இஸ்லாமிய பெண்களை சமூகத்திலிருந்து தவறான பாதையில் வழிநடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

talaq3

மேற்கண்ட கருத்தை அகில இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஷாயிஸ்டா அம்பர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முத்தலாக்கை ஆதரிக்கும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் அதை குரானில் எழுதப்பட்டிருப்பது போல அப்படியே பின்பற்றுவோம் என்று தங்களது ஆவணங்களில் எழுதியிருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எடுத்த எடுப்பிலேயே ஒரு தடவையிலேயே மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு மனைவிமார்களை தள்ளிவைக்கும் ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் பற்றி குரான் கூறுவது என்ன?
ஒரு ஆண் ஒருமுறை தலாக் சொல்லிவிட்டு மூன்று மாதத்திற்குள் அவர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுவிட்டால்,அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்துகொள்ளலாம்.இப்போது மீண்டும் அவர்களிடையே பிரச்சினை வந்து இரண்டாவது முறை தலாக் சொல்லி மூன்று மாதத்திற்குள் அவர்கள் சமாதானமாகி மீண்டும் சேர்ந்து வாழலாம்.இப்போது மூன்றாவது முறையாக பிரச்சினை வந்து தலாக் சொன்னால் மட்டுமே அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ அனுமதி இல்லை. விவாகரத்துதான் இதற்க்கு இறுதி தீர்வு என குரானை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் தலாக் பற்றி குரான் கூறுவதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.