சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இது வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்றும், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது வரும் 29ஆம் தேதி உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.