சென்னை: ரூ.2000 நோட்டுக்கான கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள  நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 5,900 பெட்ரோல் நிலையங்களில் நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது என  பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என மத்தியஅரசு அறிவித்த நிலையில்,  கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் அ ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டுக்கள் கடந்த 7 ஆண்டுகளாக புழகத்தில் இருந்து வந்த நிலையில், 2023ல், செப்டம்பர் 30ம் தேதிக்குபிறகு ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி  அறிவித்தது. மேலும், ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனறும், 5 மாதங்கள் அவகாசம் வழங்கியது. இதையடுத்து,  பலர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். ஆகஸ்ட் மாத இறுதியில் மே 19ம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியது.

இந்த சூழலில் ரூ.2000 மாற்றுவதற்கான கெடு, இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.  இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவில்களில் போடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுக்களை அடையாளம் காணும் வகையில் உண்டியல் எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறைகளில், பணம் வசூலிக்கும்போது ரூ.2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பெட்ரோல் பங்க்குகளில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களிடம் ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு சம்மந்தப்பட்ட ஊழியர்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.