டில்லி

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த தொடரில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி இருந்தன.   இதனால் பலமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடரின் நிறைவு நாள் அன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியைச் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு அவரது நடவடிக்கை குறித்து விசாரித்தது.

நேற்று நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு முன்பு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆஜரானபோது அவர், மக்களவையில் தனது ஒழுங்கீன செயல்பாடுகளுக்காக வருத்தம் தெரிவித்தார்.  இதனடிப்படையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஏற்று அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.  நேற்று முதல் அவரது தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.