புதுடெல்லி:

சமீபத்தில் வெளிவந்த இரு கருத்துக் கணிப்புகளிலும் மோடியையும், பாஜகவையும் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே, கார்வி ஆகியோர் சமீபத்தில் ஒரே சமயத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

இரண்டு கருத்துக் கணிப்புகளும் மோடியையும் பாஜகவையும் அதிக மதிப்பீடு செய்வதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் பாஜக அணிக்கு 233 தொகுதிகளும்,காங்கிரஸ் கூட்டணிக்கு 167 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 143 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கார்வி கருத்துக் கணிப்பிலும் பாஜக அணிக்கு 237 தொகுதிகளும், காங்கிரஸ் அணிக்கு 167 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 140 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் தொகுதிகளைப் பொறுத்தவரை, இரு கணிப்புகளும் ஒரே மாதிரி உள்ளன.

அதேசமயம், பாஜக அணிக்கும் காங்கிரஸ் அணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5-4 சதவீதம் இருக்கும் என சி-வோட்டரும், வித்தியாசம் 2 சதவீதம் என கார்வே கூறுகின்றன. இதில் தான் இரு கருத்துக் கணிப்புகளுக்கும் இடையே வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி- சமாஜ்வாதி கூட்டணிக்கு 58 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 18 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
பகுஜன் சமாஜ்வாதி-சமாஜ்வாதி கூட்டணிக்கு 51 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என சி-வோட்டர்ஸ் கணிப்பு கூறுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியை, மற்ற கட்சிகள் பட்டியலில் சேர்த்துள்ளது இந்தியா டுடே.

தென்னிந்தியாவை பொருத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சி-வோட்டர்ஸை விட 10 தொகுதிகள் அதிகமாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிகமாக 6 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு சி-வோட்டர்ஸைவிட 16 தொகுதிகள் குறைவாகவும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை, பாஜக அணி 26 தொகுதிகளை கைப்பற்றும் என இந்தியா டுடே- கார்வியின் கணிப்புகள் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி இன்றி இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பாஜக அணிக்கு ஒரே வாய்ப்புள்ள மாநிலம் கர்நாடகா தான். இப்படியிருக்கும் போது, கருத்துக் கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது.