டில்லி:

17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அஜோய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சியின் 6 மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் தங்களது தலைவர் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

ஏற்கனவே  உ.பி., ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்துவிட்டதை தொடர்ந்து, பல மூத்த தலைவர்கள் மீது ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,  ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப் பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அஜோய் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல், அஜோய் குமாருக்கு அடுத்து அமேதி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரான யோகேந்திர மிஸ்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுவரை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.