2024 மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதன்பிறகு உத்தரபிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் தங்கள் சுற்றுப்பயணத்தை மார்ச் 13ம் தேதிக்குள் நிறைவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான வழக்கமான சந்திப்புகளையும் அவர்கள் நடத்த உள்ளனர்.
அதேவேளையில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக மார்ச் 4 முதல் 10 நாட்களில் தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு-காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை மார்ச் 13ம் தேதி நிறைவு செய்கிறார்.
தேர்தல் அதிகாரிகளின் ஆய்வும் அதே தேதியில் முடிவடைவதை ஒட்டி மார்ச் 14 அல்லது 15ம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2019 லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைக்கான தேர்தலும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றதைப் போல இம்முறையும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் 90 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 96.8 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.